ராஜ்யசபா எம்.பி பதவியை காங்கிரஸ் தலைவர் கே.சி.ராமமூர்த்தி இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு காவல்துறையில் ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.சி.ராமமூர்த்தி, காங்கிரஸில் கட்சியில் இணைந்து அரசியல் களம் கண்டவர். கர்நாடக மாநிலத்தின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 2022 வரை உள்ளது.
கர்நாடக காங்கிரஸின் ஆபத்பாந்தவனாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார் ராமமூர்த்தி. சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த புகாரில் அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டு டி.கே.சிவக்குமார் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தனது எம்.பி பதவியை ராமமூர்த்தி திடீரென ராஜினாமா செய்தார்.
ராமமூர்த்தியின் ராஜினாமா கடிதம் மாநிங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவால் ஏற்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 45ஆக குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களை இழந்துள்ளது. எம்பி பதவியை ராஜினாமா செய்த ராமமூர்த்தி பாஜகவில் இணையலாம் என்று அரசியல் நோக்கர்களால் ஊகிக்கப்படுகிறது.
source ns7.tv