இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாக, தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்களை எளிமையாக்குதல் மற்றும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்ட பிறகும், தேர்வு முடிவு வெளியாகும் போது சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவிர்க்க இயலாததாக உள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி, உலகில் அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 2,646 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டுமே இளம் வயதில் மாணவர்கள் கடினமான பாடத்திட்டங்களை எதிர்கொள்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கடினமான நேரத்தில், பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்றும் கல்வி திட்டத்தில் மேலும் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv