சனி, 12 அக்டோபர், 2019

காங். தலைவர் பரமேஸ்வரா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு: ரூ.4.25 கோடி பறிமுதல்!

Image
கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ஐடி சோதனையில் ரூ.4.25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஜி.பரமேஸ்வரா மற்றும் மற்றொரு முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜலப்பா ஆகியோருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சுமார் 300க்கும் அதிகமான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
சில இடங்களில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வருமானவரித்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமேஸ்வராவின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.4.25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகுதி இல்லாத மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ரூ.50 லட்சம், ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த பிரம்மாண்ட சோதனை நடைபெற்றது. ரொக்கம் மட்டுமல்லாது சில முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பரமேஸ்வராவின் சகோதரரின் மகன் ஆனந்தின் வீடு, சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இன்றும் சோதனை நடைபெற்றது. சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியானது, பரமேஸ்வராவுடன் தொடர்புடைய ட்ரஸ்டால் நடத்தப்படுகிறது.
குமாரசாமி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசில் பரமேஸ்வரா துணை முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv