சனி, 26 அக்டோபர், 2019

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளனர் - உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு(2019) இதுவரை முடிந்துள்ள பருவமழை காலத்தில் 22 மாவட்டங்களில் உள்ள 26 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெள்ளம் மற்றும் மழை சம்பந்தப்பட்ட காரணங்களால் 2155 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணங்களால் மஹாராஷ்டிர மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக அம்மாவட்டத்தில் 430 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 227 பேரும் உயிரிழந்துள்ளனர். அதோடு, மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இந்தியாவில் உள்ள 361 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 803 பேர் காயமடைந்துள்ளதாகவும், 20000க்கும் மேற்பட்ட வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் 2.23 லட்சம் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 2.06 லட்சம் வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 14.09 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் 30 தேதி அதிகாரப்பூர்வமாக பருவமழைகாலம் முடிவடைந்த நிலையில், சில மாநிலங்களில் பருவமழைகாலம் இன்னும் முடிவடையவில்லை. ஜூன் முதல் செப்டம்பர வரையிலான 4 மாத காலத்தில் கடந்த 1994ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தின் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 430 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 398 பேர் காயமடைந்ததோடு, 7.19 லட்சம் மக்கள் , 305 நிவாரண முகாம்களில் தங்கும் நிலமைக்கு உள்ளாகினர்.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை, 227 பேர் உயிரிழந்துள்ளதோடு, 37 பேர் காயமடைந்துள்ளனர். நான்கு பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பருவமழைகாலத்தில் இம்மாநிலத்தில் 280 நிவாரண முகாம்களில் 43,433 பேர் தங்கவைக்கப்பட்டனர்.
பீகாரைப் பொறுத்தவரை, 166 பேர் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 1.96 லட்சம் பொதுமக்கள் 282 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை, 189 பேர் உயிரிழந்துள்ளதோடு, 39 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 32,996 பொதுமக்கள், 38 மாவட்டங்களில் உள்ள 98 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

கேரளாவை பொறுத்தவரை, 181 பேர் உயிரிழந்துள்ளதோடு, 72 பேர் காயமடைந்துள்ளனர். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 4.46 லட்சம் பொதுமக்கள் 2,227 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தை பொறுத்த வரை 192 பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 பேர் காயமடைந்துள்ளனர். இம்மாநிலத்தில் மொத்தம் 22 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 17,783 பொதுமக்கள் 102 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலத்தை பொறுத்த வரை 285 பேர் உயிரிழந்துள்ளதோடு, 49 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு, 6 பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 16 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 2.48 லட்சம் பொதுமக்கள் 3,261 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்த வரை 101 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, 6 பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 5.35 லட்சம் பொதுமக்கள் 1,357 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit ns7.tv