ஞாயிறு, 27 அக்டோபர், 2019

குழந்தை சுஜித்தை மீட்க பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடக்கம்!

credit ns7.tv
Image
ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்து வரும் குழந்தை சுஜித்தை மீட்க, ராட்சத இயந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டுவருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்படி கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் மாலையில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் கொடுத்து,  குழந்தை சுஜித்தை மீட்க முயன்றனர். குழந்தை முதலில் 26 அடியில் சிக்கிய நிலையில் பின்னர் 85 அடி ஆழத்துக்கு சென்றது. இதையடுத்து இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தது. இதனால் குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி நடுக்காட்டுப்படி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் 100 அடிக்கு குழி தோண்டி, அதில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குழியின் பக்கவாட்டில் 3 நபர் கொண்ட ஊழியர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டு வரும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் தோண்டி குழநதையை மீட்கும்போது, குழந்தை மேலும் கீழே சென்றுவிடாமல் தடுக்க நடவடிக்கின்றனர். 
இதனிடையே குழந்தை சுஜித் சுவாசித்து வருவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரித்துள்ளார். பக்கவாட்டில் 2 மணி நேரத்தில் 90 அடி வரை குழி தோண்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகமே சுஜித் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறது.