புதன், 16 அக்டோபர், 2019

நாளை தொடங்க உள்ளது வடகிழக்கு பருவமழை...!

credit ns7.tv
Image
தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் வட கிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சராசரி மழையை பூர்த்தி செய்யுமா? குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த சென்னையில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
நாடு முழுவதும் 90 சதவிகித பகுதிகள் தென் மேற்கு பருவமழையால் மழையை பெற்றாலும், தமிழகத்தை பொருத்த வரை ஆண்டின் சராசரி மழை பொழிவில் 48% வட கிழக்கு பருவமழையால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்ததன் விளைவாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையை சந்தித்தது. இதில் தலை நகர் சென்னை குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்தது.
ஏற்கனவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் வட சென்னை, காஞ்சிபுரம், வேலூர்,
திருவள்ளூர் உட்பட வட தமிழகத்தில் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2017ல் குறைவான மழை பொழிவும், 2018ல் முற்றிலும் மழை இல்லாத சூழலும் இருந்த நிலையில் தற்போது துவங்கும் வட கிழக்கு பருவக்காற்று இயல்பான மழையை கொடுக்கும் என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன். கடந்த நான்கு மாதங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி போன்ற வானிலை மாற்றங்களால் உள் தமிழக மாவட்டங்களும், தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தின் மலை மாவட்டங்களும் ஓரளவு மழையை பெற்று உள்ளன.  
மழை பொழிவு குறைவாக இருக்கும் வட தமிழக மாவட்டங்கள் வட கிழக்கு பருவமழையே பெரிதும் எதிர்பார்த்து உள்ளன.