சனி, 26 அக்டோபர், 2019

ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி...!


Image
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் தான், இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடைபெற்று தமிழர்களின் பெருமை உலக அரங்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து தான்,  சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞரான பானர்ஜி, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் தாமிரபரணி கரை ஆதிச்சநல்லூர் நாகரீகம் என உறுதியளித்தார். இந்த வரலாற்றுப் பெருமையை அறிந்த  நியூஸ் 7 தமிழின் உளவுப்பார்வைக் குழுவினர், தமிழர்களின் வரலாற்றுப் பெருமையும், நாகரீக தொட்டிலும் புதைந்து கிடைக்கும் சிவகளைக்கு நேரில் சென்று அதன் பெருமைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தது.  
இதற்கிடையில், 2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு அறிக்கை 15 ஆண்டுகளை கடந்தும் வெளியிடப்படவில்லை என்றும் உடனடியாக அடுத்தக்கட்ட ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில ஆய்வு செய்ய மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டது. தற்போது, அதற்கான அனுமதியை, மத்திய அரசு அளித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில், விரைந்து ஆய்வுப்பணியைத் தொடங்குவதுடன், அங்கு உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு செய்வதால், தமிழர்களின் தொன்மை  மீண்டும் உலகிற்கு தெரிய வரும் என திடமாக நம்புகின்றனர். மேலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு மாணவ மாணவிகளை அழைத்து சென்று தமிழர்களின் பெருமைகளை எடுத்துக்கூற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

credit ns7.tv