ஞாயிறு, 13 அக்டோபர், 2019

காவல்துறை மீதான பயம் குற்றவாளிகளுக்குப் போய்விட்டது”-முரசொலி கடும் விமர்சனம்

Image
காவல்துறை மீதான பயம் குற்றவாளிகளுக்குப் போய்விட்டது; ஆனால் அந்த பயம் அப்பாவிகளுக்கு வந்துவிட்டது என்று முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
“கொலை நகரம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள முரசொலி நாளிதழ், “சென்னைக்கு சீனப் பிரதமர் வருகிறார். 15000 காவலர்கள் பாதுகாப்புப் பணியி இருக்கிறார்கள். நக்சல் வேட்டையில் ஈடுபடும் அதிரடிப்படையினர் 100 பேரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்கான ஒத்திகை கிண்டி, பல்லாவரம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தி மிரட்டியுள்ளனர். மொத்த சென்னையும் காவலர்களின் வளையத்தில் இருக்கிறது; குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துவர கூட இரண்டு நாட்களுக்கு விலக்கு வாங்கியிருக்கிறது. காவல்துறை உஷாராக இருப்பதற்கு சபாஷ் போடுவதற்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சும், அரிவாள் வெட்டு சம்பவமும் சென்னை அண்ணா சாலையிலும், பல்லாவரத்தில் பட்டாகத்திவெட்டும் நிகழ்ந்துள்ளது” என்றும் விமர்சித்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை அலுவலகம் இருக்கும் எழும்பூரிலிருந்து ஆட்டோவில் புறப்பட்ட வழக்கறிஞர் மலர்க்கொடியை, பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து, அவரை அரிவாளால் வெட்டுகிறது, வெடிகுண்டு வீசுகிறது. நாட்டு வெடிகுண்டு தவறி வெளியில் வெடித்ததில் அந்த பகுதியையே பதைபதைப்பில் ஆழ்த்தியது. ரவுடிகள் வழக்கம் போல தப்பிவிட்டார்கள். வழக்கம்போல லேட்டாக வந்தது போலீஸ்” என்று விமர்சித்துள்ளது.
பல்லாவரத்தில் அஷ்வின் - கணேஷ் என்ற இருவருக்கு இடையில் நடந்த தகறாரில் கணேஷ், அஷ்வின் மீது பட்டாகத்தியை வீசுகிறார். இதில் தலை மற்றும் உள்ளங்கையில் அஸ்வின் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவும் பாதுகாப்பு ஒத்திகை நடந்த இடத்தில் நடந்திருக்கிறது என்றால் தலைநகரை கொலை நகர் என்று அழைக்காமல் என்னவென்று அழைப்பது? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், “எழும்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வந்தால் 5 நிமிடத்தில் சென்றுவிடும் தூரத்தில் இருக்கும் இடத்தில் பட்டாசு பாகுகள் சினிமா காட்சிகளை நடத்துகிறார்கள் என்றால் தலைநகரை கொலை நகர் என்று சொல்லாமல் என்ன சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
காவல்துறை குறித்த பயம் குற்றவாளிகளுக்கு போய்விட்டது. ஆனால் அப்பாவிகளுக்கு வந்துவிட்டது. எந்த தவறும் செய்யாதவர்கள் காவல்துறையினரை பார்த்து பயப்படுகிறார்கள். காவல்துறை தனது கண்காணிப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் என்ன காரணம்? காவல்துறையை இன்றைய ஆட்சியாளர்கள் கண்காணிக்காததுதான் காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

credit ns7.tv