திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்தை கடந்தும் நீடித்து வருகிறது.
நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பிரிட்டோ ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது மகன் சுஜித் வின்சென் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு இருந்ததை அறியாத குழந்தை அதில் தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த பெற்றோர், ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், குழந்தை 27 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வால், குழந்தை கிணற்றில் இறங்கியதால், பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையின் கைகளில் கயிறை சுருக்கு போட்டு மேலே தூக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் குழந்தையை மீட்க, மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தயாரித்த ஆழ்துளை ரோபோ பயன்படுத்தப்பட்டது. அப்போது குறிப்பிட்ட ஆழத்திற்கு சென்ற ரோபோ ஆழ்துளை கிணற்றின் விட்டம் குறைவாக இருந்ததால், அதற்கு கீழே இறங்காமல் போனது. இந்த முயற்சி தோல்வி அடைய மீண்டும் குழந்தையின் கைகளில் சுருக்கு போட்டு தூக்க முயற்சித்தனர்.
ஆழ்துளை கிணற்றிலிருந்த குழந்தைக்கு தைரியம் அளிப்பதற்காக அவரது தாய் அவ்வப்போது ஆறுதல் கூறியது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், பொதுமக்களையும் கலங்கச் செய்தது. இந்த சமயத்தில் மீட்பு படையினர் அனுப்பிய கயிறு குழந்தையின் இரு கைகளிலும் சுருக்கு விழ உடனடியாக குழந்தையை மெதுவாக தூக்க தொடங்கினர். அப்போது ஒரு கையில் விழுந்திருந்த சுருக்கு அவிழ்ந்ததால் தொடர்ந்து குழந்தையை மேலே தூக்க முடியாமல் போனது.
வேறு வழியின்றி மீண்டும் பக்கவாட்டில் நாலா புறமும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வால், 27 அடியில் சிக்கியிருந்த குழந்தை 31 அடிக்கு கீழே சென்ற நிலையில், பள்ளம் தோண்டும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் கோவையில் இருந்து வந்த மீட்பு படையினர் நவீன கருவிகள் உதவியுடன் மீட்க முயற்சித்தும் அதுவும் பலனளிக்காமல் போனது. மேலும் குழந்தையின் கையில் கட்டப்பட்டிருந்த சுருக்கு கயிறு அவிழ்ந்ததால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் நாமக்கல்லைச் சேர்ந்த ஐஐடி மீட்பு குழுவினர் நவீன கருவிகள் உதவியுடன் குழந்தையை மீட்க போராடினர். ஆனால் ஆழ்துளை கிணற்றின் விட்டம் குறைவாக இருந்ததால் கருவியை குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இறக்க முடியவில்லை. இதனிடையே 31 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு சென்றதாகவும், குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவி கோரப்பட்டதாகவும் ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்
credit ns7.tv