வியாழன், 24 அக்டோபர், 2019

அவதூறாகப் பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

Image
இந்து கடவுள்களை பற்றி அவதூறாகப் பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகையில் அமைந்துள்ள காரப்பன் சில்க்ஸ் உரிமையாளரான காரப்பன் கடந்த மாதம் 29ஆம் தேதி கோவை நவ இந்தியா பகுதியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்து கடவுள்களை பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இந்துமுன்னணியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் காரப்பன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் சமூக நல்லிணக்கத்துக்கு சவால் விடும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய காரப்பனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளான
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை தூண்டுதல், குறிப்பிட்ட மதம் குறித்து இழிவாக பேசுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காரப்பன் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.
credit ns7.tv