சனி, 12 அக்டோபர், 2019

அசுத்தமான குடிநீரை குடித்த சிறுமி உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

Image
உத்தர பிரதேச மாநிலத்தில் அசுத்தமான நீரை அருந்திய 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் நாக்பூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து அந்த கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதை அருந்திய மக்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் பல்லியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சைப்பலனின்றி 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 9 பேர் கவலைக்கிடமான முறையில் இருப்பதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்கள் மட்டுமின்றி மேலும் 76 பேர் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த தலைமை மருத்துவர் டாக்டர் பி.கே.மிஷ்ரா “மேல்நிலைத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட அசுத்தமான நீரை குடித்ததால் உடல்நிலை மோசமாகியுள்ளது; அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மேல்நிலைத் தொட்டியில் இருந்த நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
அசுத்தமான குடிநீரை குடித்ததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்து, 9 பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சைபெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

credit ns7.tv