புதன், 16 அக்டோபர், 2019

ராஜீவ்காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் சீமானுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

credit ns7.tv
Image
ராஜீவ்காந்தி கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என, காவல் ஆணையர் அலுவலகத்தில், காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் பரப்புரை செய்தார். அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய சீமானின் பேச்சு, சர்ச்சைக்கு வித்திட்டது. ராஜீவ் காந்தி குறித்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வடசென்னை காங்கிரஸ் மனித உரிமைத் தலைவர் அப்துல் சமத், மனு அளித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையையும், இந்திய ராணுவத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புள்ளதை சீமான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 
ராஜீவ் காந்தி மரணம் குறித்த கருத்தை சீமான் தற்போதைய சூழலில் தவிர்த்திருக்க வேண்டும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்ற சீமானின் பேச்சு முட்டாள்தனமானது என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
ராஜீவ்காந்தி மரணம் குறித்த சர்ச்சை கருத்தால், பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை சீமான் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.