செவ்வாய், 15 அக்டோபர், 2019

சாதி பெயரைக் கூறி மாணவன் முதுகில் கீறிய சம்பவம்: இழப்பீடு வழங்க மாணவனின் தாய் கோரிக்கை...!

Image
மதுரை அருகே பள்ளியில் சாதி பெயரைக் கூறி மாணவரின் முதுகில் சக மாணவர்கள் பிளேடால் கீறிய சம்பவத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாணவரின் தாயார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சாதியின் பெயரால் ஆணவக்கொலை, பள்ளிகளில் மாணவர்கள் சாதி ரீதியாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகளை கடந்து சென்றிருப்போம். சாதி வெறி பள்ளியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியிலும் வேர் விட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் சரவணக்குமார். இவர், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று, மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, சக மாணவர்கள் இவரது புத்தகப் பையை மறைத்து வைத்துள்ளனர். தம்முடைய புத்தகபையை ஏன் மறைத்து வைத்தீர்கள் என கேள்வி கேட்ட மாணவரை சாதி ரீதியாக திட்டியதுடன், மாணவனின் முதுகை பிளேடால் கீறியுள்ளனர் சகமாணவர்கள். 
வலி தாங்கமுடியமால் ரத்த வெள்ளத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த மாணவர். தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மகா ஈஸ்வரன் என்ற மானவன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காயடைந்த சரவணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சரவணக்குமாரின் தாயார்  ராசாத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் தனது மகன் தாக்கப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த காரணத்தால், தாங்கள் மகா ஈஸ்வரனின் குடும்பத்தினரால் மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த தனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணகுமாரின் தாயார் ராசாத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

credit ns7.tv