சர்வதேச மல்யுத்த களத்தில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று பெருமைப்படுத்திய பபிதா போகத், யோகேஸ்வர் தத் அரசியல் களத்தில் தோல்வியை தழுவியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலைவிட அதிகம் பேசப்படும் விவகாரமாக ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் மாறியிருக்கிறது. நட்சத்திர வேட்பாளர்கள் தேர்வில் தொடங்கி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஹரியானா தேர்தலில் இன்று கிளைமேக்ஸ் அரங்கேறி வருகிறது.
இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையான பபிதா குமாரி போகத் (வயது 29) மற்றும் வீரர் யோகேஸ்வர் தத் (வயது 36) ஆகியோர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தனர்.
காமன்வெல்த் போட்டித்தொடரில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற பபிதா போகத்தின் வாழ்க்கையை சித்தரித்து அமீர் கான் ‘Dangal’ என்ற வெற்றித் திரைப்படத்தை எடுத்தது நினைவிருக்கலாம். இவர்கள் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது பாஜக.
Dadri தொகுதியில் போட்டியிட்ட பபிதா, காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றாலும் சுயேட்சை வேட்பாளர் சோம்பிர் என்பவரிடம் தோல்வியையே தழுவினார். பபிதா 24,786 வாக்குகள் பெற்ற நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் வேட்பாளர் சத்பால் சங்வான் 28,577 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர் சோம்பிர் 43,849 வாக்குகள் பெற்று தாத்ரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போல 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத், பரோடா தொகுதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் கிரிஷ்ணன் ஹூடா 42,566 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். யோகேஸ்வர் தத்தால் காங்கிரஸ் வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை மட்டுமே தர முடிந்தது. இறுதியாக 37,726 வாக்குகள் பெற்று யோகேஸ்வர் இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் அடைந்தார்.
இதனிடையே முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங், பாஜக சார்பில் பெகோவா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv