சனி, 12 அக்டோபர், 2019

சென்னையில் திபெத்தியர்கள் 18 பேர் கைது...


Image
சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை வந்தடைந்தார். அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தில் வசிக்கும் திபெத்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை கிண்டியில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர விடுதி, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் தங்கும் சென்னை கிண்டி நட்சத்திர விடுதி அருகே, ஆறு திபெத்தியர்கள் திடீரென சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேரையும் குண்டுகட்டாக தூக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி, கைது செய்து, வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். 
அதே போன்று சென்னை விமான நிலையம் அருகே, சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட முயன்ற 2 பெண்கள் உட்பட 6 பேரை கண்டறிந்த காவல்துறையினர் உடனடியாக கைது செய்து, விமான நிலைய காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோல், மாமல்லபுரத்திலும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, மூன்று திபெத்தியர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
இதற்கிடையே சென்னையில் இயங்கி வரும் அமெரிக்க உளவுத்துறையின் ரேடியோ ஃப்ரீ ஏசியா என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் திபெத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களுடன் அமெரிக்க ஊடகமான வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் ஊழியர் மற்றும் திபெத்திய மதபோதகர் ஒருவரையும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ஒரே நாளில் போராடத்தில் ஈடுபட முயன்ற 18 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

credit ns7.tv