சனி, 26 அக்டோபர், 2019

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்!

Image
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் 2010ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்துள்ளது.
தண்ணீர்த் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்காக 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்தக் கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனைத் தோண்டிய ஒப்பந்ததாரரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
புதிய ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம், அதனை அமைப்பவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதுபற்றி எழுத்து மூலமாக சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். 
ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூடும் விதமாக இரும்பு மூடி ஒன்றையும் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், ஆழ்துளை கிணறுகள் பற்றிய விரிவான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

credit ns7.tv