வெள்ளி, 11 அக்டோபர், 2019

சீன அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற திபெத்தியர்கள் கைது...!

credit ns7.tv
Image
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திபெத்தியர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மதியம் சென்னை வர உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் அவர், பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். 
இந்நிலையில், சீன அதிபர் ஓய்வெடுக்க உள்ள நட்சத்திர விடுதி அருகே, சீன நாட்டவர் போர்வையில் வந்த 6 திபெத்தியர்கள், திடீரென சீன அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார், அவர்கள் 6 பேரையும் குண்டுகட்டாக தூக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி, கைது செய்து, வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். 
மற்றொரு நிகழ்வாக சென்னை விமான நிலையம் அருகே குழுமிய திபெத்தியர்கள் 6 பேரை, விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பும்  நோக்கில், பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் 2 பெண்கள், 4 ஆண்கள் என 6 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர். 
அவர்களை அடையாளம் கண்டு கொண்ட விமான நிலைய போலீசார், 6 பேரையும் உடனடியாக கைது செய்து, விமான நிலைய காவல் நிலையத்திற் கொண்டு சென்றனர். இதேபோல், மாமல்லபுரத்திலும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.