வியாழன், 17 அக்டோபர், 2019

தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை...!


Image
தமிழகத்தில் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி, நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பலபகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, வெள்ளகோவில் ஈஸ்வரன் கோவில் அருகே குடியிருப்பு பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சாக்கடை வசதிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக சரி செய்யாததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தங்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அங்கன்வாடி கட்டடம், மழை நீர் சொட்டும் அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. குன்னூர் நகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கன்வாடி கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், கட்டடத்திற்குள் மழை நீர் கசிகிறது. இதனால், அங்கன்வாடிக்கும் வரும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

credit ns7.tv