
வேலூரில் லஞ்சம் பெற முறைகேடாக தனி அலுவலகம் திறந்த அரசு அதிகாரி, தலா 10,000 ரூபாய் சம்பளத்தில் 37 பேருக்கு அரசு அலுவலகப் பணிகளை வழங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களைக் காணவில்லை என பொறுப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியனிடம் கேட்ட போலீசாருக்கு, அதிர்ச்சியான பதில் கிடைத்தது.
வேலூர் வள்ளலார் விவேகானந்தர் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ள சுப்பிரமணியம், 37 பேரை தலா 10,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அரசுப் பணிகளை அங்கு மேற்கொண்டுவந்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளாக 4 லட்சம் ரூபாய் செலவழித்து நடத்தப்பட்ட இந்த போலி அலுவலகம் மூலம் அவர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. சுப்பிரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.