ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தமிழரின் பாரம்பரிய விவசாயத்தை 26 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் வெள்ளைக்கார விவசாயி! December 02, 2018

Image

மண் இல்லாமல், மனித இனம் இல்லை...அயல்நாட்டில் இருந்து வந்து, தமிழரின் பாரம்பரிய விவசாயத்தை 26 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார் ஒரு வெள்ளைக்கார விவசாயி. கொஞ்சும் தமிழில் பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இங்கிலாந்து நாட்டை சார்ந்த மெக்கென்சி.
இங்கிலாந்து நாட்டை சார்ந்தவர் மெக்கென்சி. தமிழர் பண்பாடு மீதும், கலாசாரத்தின் மீதும் ஈடுபாடு கொண்டு, 1992 ஆம் ஆண்டு தனது 19 ஆம் வயதில் ஆரோவில் சர்வதேச நகரத்தில் இணைந்த அவர், தமிழ் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். தமிழர் விவசாயத்தை காப்பதை இலக்காகக்கொண்டு, கடந்த 26 ஆண்டுகளாக களமாடி, உள்ளூர் பயிர்களை இயற்கை முறையில் விளைவித்து வருகிறார் இவர்.
அயல்நாட்டு சாயலோடு இணைந்து அழகுத்தமிழில் பேசும் கிருஷ்ணா, 6 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் தமிழரின் பாரம்பரிய விவசாய பயிர்களை பயிரிடுகிறார். மா, பலா, வாழை, பப்பாளி, கொய்யா, தென்னை, பனை, மஞ்சள், பொன்னாங்கன்னி, பாலக்கீரை, பசலை, கீழாநெல்லி, தினை, கம்பு, சோளம், சாமை, வரகு, முடக்கத்தான், மணத்தக்காளி என மருத்துவ குணம் கொண்ட 140 வகையான பயிர்களை விவசாயம் செய்து வருகின்றார் கிருஷ்ணா.
நம்ம ஊரு நல்ல ஊரு...இப்போ ரொம்ப கெட்டு போச்சன்னே...என்ற பாடலை பாடி, வெளிநாட்டு காய்கறிகளை உண்டு, தமிழ் பாரம்பரியத்தை தமிழர்கள் மறந்து விட்டனர் என்றும், மண் தான் நம் சொத்து எனவும், நல்ல ஆரோக்கியமான உணவும், மனநிலையும் கொண்டவன் மட்டுமே பணக்காரன் என்கிறார் கிருஷ்ணா.
பயிரிடும் காய்களை வைத்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து உணவகம் ஒன்றையும் கிருஷ்ணா தம்பதியினர் நடத்திவருகின்றனர். அயல்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த உணவகம் வந்து, நம் பாரம்பரிய உணவை விரும்பி உண்ணுகின்றனர். இதுமட்டுமின்றி, 
இவரது தோட்டத்திற்கு வருபவர்களுக்கு தமிழரின் பாரம்பரிய பயிர்கள், அவற்றின் மருத்துவத்தன்மை, விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுக்கின்றார். 
தனது நாட்டில் உணவு முறையே அழிந்து விட்டதாகவும், ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை என கூறும் கிருஷ்ணா, தமிழர் உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே, இந்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றார்.