ஞாயிறு, 2 டிசம்பர், 2018

முடங்கப்போகிறதா பி.எஸ்.என்.எல் சேவை? December 02, 2018

Image

பி.எஸ்.என்.எல்-க்கு 4-ஜி அலைக்கற்றை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை பிஎஸ்என்எல்  ஊழியர்கள்  மேற்கொள்ள உள்ளதால், அந்நிறுவனத்தின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் ஏகோபித்த ஆதிக்கம் துவங்கியது முதல், ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.  கடந்த காலங்களில்  வாடிக்கையாளர்களின்  பெரும் ஆதரவை பெற்றிருந்த  ஏர்டெல் நிறுவனம் கூட மெல்ல மெல்ல இழப்பை சந்திக்க நேரிட்டது. இதனையடுத்து  ஏர்டெல், வோடோபோன், ஐடியா ஆகியவை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்  கடனில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இதன் காரணமாகவே  வோடோபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஏர்செல், டாடா டெலிசர்விசஸ், டெலினார் உள்ளிட்டவை தங்களின் சேவைகளை மூடப்பட்ட வரலாறும் மறந்திட இயலாது. இந்த நிலை, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலேயே, பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பு  போராட்ட களத்தில் குதித்துள்ளது.
  
மத்திய அரசு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றுவதற்காகவும், அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் இருக்க கூடாது என்ற காரணத்திற்காகவே, 4ஜி அலைக்கற்றையை ஒதுக்குவதில் மெத்தனபோக்கை கடைபிடிப்பதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. 

பிஎஸ்என்எல்-லில் ஓய்வூதிய பங்களிப்பை முறைப்படுத்த வேண்டும். 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.  

இந்த காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களும் ஒரே பதாகையின் கீழ் ஒன்று திரண்டுள்ளனர். 

ஒட்டு மொத்த பிஎஸ்என்எல் ஊழியர்களும் அதிகாரிகளும்,  வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளதால்  பிஎஸ்என்எல் நிறுவன  சேவை  முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.  அரசு பொது துறை நிறுவனத்தை முடங்க செய்யும் தனியார் தொலைதொடர்பு நிறுவன ஆதிக்கத்தை,  இனியாவது மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஆதங்கம் நிறைவேறுமா....?