குறைந்தபட்ச ரீசார்ஸ் செய்யாத தொலைபேசி எண்களின் அழைப்புகளை துண்டித்த தொலைதொடர்பு நிறுவனங்களின் நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த எண்களை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான பின், குறைவான கட்டணத்தில் இணைய வசதி, அழைப்பேசி உள்ளிட்டவைக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களை தமது பக்கத்தை ஈர்த்துக்கொண்டது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள், மற்ற நிறுவன எண்களை பயன்படுத்தினாலும், முதலாவதாக ஜியோ சிம் கார்டை பயன்படுத்தி வந்தனர். இரட்டை சிம் கார்டுகள் உடைய ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முதலாவதாக ஜியோ சிம்கார்டையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் முன்னணியில் இருந்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை கண்டதுடன், சந்தையில் தங்களுக்கான இடங்களையும் இழந்தன. மேலும் ஜியோவின் தொடர் சலுகைகளால், பழைய எண்களில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். கடும் சரிவைச் சந்தித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், புதிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளன. போதிய வைப்புத்தொகை இருந்தாலும், மாதம் குறைந்தபட்ச தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் எண்களுக்கான சேவை ரத்து செய்யப்படும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல்கள் விடுக்க தொடங்கின.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாதம் குறைந்தப்பட்ச ரீசார்ஜ் செய்யாத காரணத்துக்காக எண்களின் அழைப்பை துண்டிக்கக் கூடாது என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சேவை காலாவதி ஆகும் தேதி குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது டிராய்.
மேலும், காலவதி ஆகும் தேதிக்கு முன்பே இணைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் டிராய் தெரிவித்திருக்கிறது. சந்தையில் உள்ள கடும் போட்டிகளை சமாளிக்க, சிறப்பு சலுகைகளை அளித்து, வாடிக்கையாளர்களை கவர வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டாய ரிச்சார்ஜ் நிபந்தனைகளை விதித்து, சேவை துண்டிக்கப்படும் என மிரட்டல் விடுப்பது, தொழில்நிறுவனங்களுக்கு ஏற்புடையதல்ல என்பது வாடிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. டிராயின் அறிவுரையை, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றி, வாடிக்கையாளர்களை தக்க வைக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.