திங்கள், 3 டிசம்பர், 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தால் ஸ்தம்பித்து போன பாரீஸ்... December 03, 2018

Image

பிரான்ஸ் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த எரிபொருள் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மஞ்சள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், தலைநகரே ஸ்தம்பித்து போனது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு போதுமான நிதியை திரட்ட முடிவு செய்த பிரான்ஸ் அரசு பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரியை விதித்தது. உலக வெப்பமயமாதலை தடுக்கவும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரான்ஸ் விளக்கம் அளித்தாலும், வரலாறு காணாத எரிபொருள் விலை உயர்வு அந்நாட்டு மக்களை கதிகலங்கச் செய்தது. கூடுதல் வரியால், 12 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை 23 சதவிகித அளவுக்கு கடுமையாக உயர்ந்தது. 

இதனால் பிரான்ஸ் நாட்டில் ஒரு லிட்டர் டீசல் விலை இந்திய மதிப்பில் நூறு ரூபாயை எட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பிரான்ஸில் வாகன ஓட்டுநர் மஞ்சள் நிற உடையணிந்து வாகனத்தை இயக்குவார்கள் என்பதால், அதே நிற ஆடையை அணிந்த போராட்டக்காரர்கள்,  தலைநகர் பாரிஸ் உள்பட முக்கிய நகரங்களில் 3 வாரங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். பேஸ்புக், ட்விட்டர் வழியாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதால், இப்போராட்டம் 1600 பகுதிகளில் விரிவடைந்தது. 

மஞ்சள் போராட்டம் என்ற பெயரில் நடந்த இப்போராட்டத்தால்  பிரான்ஸ் ஸ்தம்பித்து போனது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தலைநகர் பாரிசில் உள்ள சாம்ஸ் எலிசீஸ் பகுதியில், மக்கள் கூடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியது. பாரபட்சமின்றி வாகனங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தினர். 


கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார், கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், போராட்டக்காரர்களை விரட்டினர். வன்முறையால் அப்பகுதியே போக்களமாக மாறியது. தீ வைப்பு சம்பவங்களால் பாரிஸ் நகர வீதிகள் புகை மண்டலமாக மாறியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் திணறிப் போயினர்.

வன்முறையில் 20 போலீஸார் உள்பட 140 பேர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைஅறிந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பின்னர், போராட்டத்தின் தீவிரம் குறித்து உள்துறை அமைச்சர் உடன் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். வன்முறை கட்டுக்கடங்காத பகுதிகளில் அவசரநிலையை பிரகடனம் செய்ய பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது