செவ்வாய், 4 டிசம்பர், 2018

காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புதல் அளித்தால்தான், மேகதாதுவில் புதிய அணை கட்டமுடியும் : மசூத் ஹூசைன் December 04, 2018

Image

காவிரி ஆணையம் ஒப்புதல் அளித்தால் தான், மேகதாதுவில் புதிய அணை கட்ட முடியும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் நேற்று கூடியது. இதில், தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணைக்கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு, குறைவான நீரை வழங்கிவரும் நிலையில், புதிய அணை கட்ட முயற்சிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆணையத்தின் அனுமதியில்லாமல் மத்திய அரசின் நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது தவறு என்றும், இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன்,  இந்த கூட்டத்தில் காவிரி பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார்.
காவிரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என கூறிய அவர், இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தார். மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு, தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறியனார் மசூத் ஹூசைன்.