புதன், 5 டிசம்பர், 2018

வருங்காலங்களில் இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும் : ஆய்வு முடிவில் தகவல்! December 04, 2018

Image

இந்தியா முழுவதும் தினம் ஒரு ஆணவக்கொலை நடந்தேறிக் கொண்டிருக்க கூடிய சூழலில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்கிறது இந்திய மனித மேம்பாட்டிற்கான ஆய்வு ஒன்று. 

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக சொந்த சாதிக்குள் திருமணம் செய்வது என்ற பண்பாட்டை கட்டிக்காத்து வருகின்றனர் இந்திய மக்கள். இத்தகைய திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் குடும்பம் என்ற அமைப்பு, சாதிய திருமணங்கள் மூலம் தான் கட்டிக்காக்கப்படுவதாகவும் நம்புகின்றனர் . கிட்டதட்ட 70 தலைமுறைகளாக சாதியை காக்க சாதிக்குள் திருமணம் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு அது வலுவாக நிற்கிறது. ஆனால் சமீபகாலமாக காதல் திருமணங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவாக பட்டப்பகலில் நடுரோட்டில் தலை துண்டிக்கப்பட்ட சங்கர், தண்டவாளத்தில் பிணமான இளவரசன், ஆற்றில் அழுகி கரை ஒதுங்கிய நந்திஸ் ஸ்வாதி தம்பதி என்று தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காதல் திருமணம், வேறொரு சாதியில் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற பிள்ளையை பெற்றோர்கள் கொல்லத் துணிவதற்கு  சாதியின் மூலம்  கொடுக்கப்படும் அழுத்தமே  காரணம். இதில் கிராமம் நகரம் என்ற பாகுபாடில்லை . இந்நிலையில் தான் ஹார்வர்டு அறிஞர் டேவிட் ரெய்ச் எழுதியுள்ள நூலில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்ற குறிப்புகள் அடங்கியுள்ளது .  
“Who We Are and How We Got Here” என்ற நூலை மனிதர்களின் வேரை கண்டறியும் நோக்கில் அவர்களின் டிஎன்ஏ கொண்டு ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் டேவிட். இதற்காக இந்தியா முழுவதும் வடக்கே காஷ்மீர் தொடங்கி குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் ,தென்னிந்தியர்கள் என்று செய்யப்பட்ட இந்த ஆய்வில் வட இந்தியர்கள்  தென்னிந்தியர்கள் இரண்டு தரப்பிலுமே அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்துள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளனர். தேசிய அளவில் 5 முதல் 6 சதவிதம் பேர் தான் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர் . அதிகபட்சமாக மிசோரமில் 55% பேர் சாதிமறுப்பு திருமணம் செய்துள்ளனர். தமிழகத்தில் வெறும் 3 %  அளவில் தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது. 

இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிக்குழுக்கள் உள்ளன. இதில் 263 வகையான சாதிக் குழுக்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் 81 குழுக்கள் தாங்கள் ஆதிக்க சாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றன. 10 லட்சத்தை தாண்டி எண்ணிக்கையில் சுமார் 14 சாதிக்குழுக்கள் இந்தியாவில் உள்ளனர். 5 ஆயிரம் சாதிக்குழுக்கள் இருக்கிறதென்றால் ஐயாயிரம் மரபு வகை நோய்களும் இந்தியாவில் இருக்கின்றன என்பதையும் டிஎன்ஏ சோதனை மூலம் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துக்கொண்டதன் விளைவாக அவர்களுக்கு நோய் உண்டாவதிலும் , பாரம்பரியமாக தலைமுறை கடந்தும் அந்நோயின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதும் இயல்பான ஒன்றாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வருங்காலங்களில் இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்பதனை இந்த ஆய்வுக்குழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறது .

காரணம் ஆய்வு செய்த இடங்களில் பெரும்பாலானோர் தங்களது பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக  கூறுகிறது இந்த ஆய்வுக்குழு. ஆரோக்கயமான இந்தியா உருவாவது வரும் தலைமுறையினரின் சாதி மறுப்பு திருமணத்தில் தான் உள்ளது என்பதே இந்த ஆய்வுகள் மூலம் எழுதப்பட்டுள்ள அந்த நூல் தரும் முக்கிய செய்தி.