வியாழன், 31 அக்டோபர், 2019

உருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

Image
அரபி கடலில் உருவாகியுள்ள மகா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
அரபி கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக மகா புயல் உருவாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  மகா புயல் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக கூறினார். 
லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மகா புயல், தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என அவர் கூறினார். 
மேலும், புயல் காரணாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறினார். 

credit ns7.tv

5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு

Image
5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
வரும் 2020ம் ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவில் 32 மாவட்டத்துக்கும் தனித்தனி தேர்வுக்குழுவை அமைத்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்வுக்குழு, மாவட்ட அளவில் பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும்,  8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய 3 பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 8-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

credit ns7.tv

இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனம்..!

Image
2050ம் ஆண்டுக்குள் வெள்ளத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடத்திய ஆய்வு ஒன்றில், பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா, சீனா, வியட்நாம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 6 ஆசிய நாடுகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக இந்நாடுகளில் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள், எவ்வித பாதுகாப்பும் இன்றி வசித்து வருவதாகவும், இதனால் மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்நாடுகள் சந்திக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 2050க்குள் 23 கோடி பேரும், இந்தியாவில் மட்டும் மூன்றரை கோடி பேரும் வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க வேண்டுமெனில் பருவநிலைக்கு ஏற்ப நகர கட்டமைப்புகளில் மாற்றம் செய்வது, கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவது, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை வாயுக்கள் வெளியேற்றுவதை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

credit ns7.tv

சுஜித்தை மீட்பதில் தோல்வி: ஸ்டாலின் எழுப்பும் 8 கேள்விகள்!


Image
கோபத்தின் உச்சியில் இருக்கும் மக்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனச்சாட்சியுடன் பதில் சொல்லியே ஆகவேண்டும்  என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 25ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றினுள் விழுந்து சிக்கிக்கொண்டான். 5 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்பு பணிகளின் இறுதியில், சுஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
சுஜித்தின் உடலுக்கு முதல்வர், துணைமுதல்வர், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மீட்புப் பணிகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து பெரும்சர்ச்சை எழுந்துள்ளது. சரியான திட்டமிடல் இல்லை, மீட்புப் பணிகளை வழிநடத்துவது யார் என்பதில் குழப்பம் இருக்கிறது என்று மீட்புபணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே கரூர் தொகுதி நாடாளுமன்ற எம்பி ஜோதி மணி கேள்வி எழுப்பியிருந்தார். பின்னர் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மீட்பு பணிகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். குறிப்பாக “80 மணி நேரம் மீட்புப் பணி” என்று அமைச்சர்கள் தங்களை சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தினார்கள். அது மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் சுதந்திரத்தை பறித்தது என்று கடுமையாக சாடியிருந்தார்.
அதோடு தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்றெள்ளாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனியாக வரைபடம் இருக்கிறது. ஆனால், நடுக்காட்டுப்பட்டி மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்று தெரிந்துகொள்ள அதிமுக ஆட்சி மூன்று நாட்கள் போராடியிருக்கிறது. சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை?. இதனால் ஓடிவிளையாட வேண்டிய சின்னஞ்சிறு சுஜித்தை மயானத்திற்கு கொண்டுபோய்விட்டது அதிமுக அரசு.  ஒரு சுஜித்தை காப்பாற்றமுடியாத அதிமுக ஆட்சி பேரிடர் காலத்தில் தமிழக மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2009ல் திமுக ஆட்சியின் போது தேனியில் 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டான். அந்த சிறுவனை மீட்க திமுகவினர் ஏன் ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ மீட்கவில்லை. நாங்கள் எடுத்தது போன்று முயற்சியை திமுக ஆட்சியில் எடுக்கவில்லை. ஸ்டாலினின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. எல்லாம் தெரிந்த விஞ்ஞானியாக இருக்கும் ஸ்டாலின் ஏன் தேனி சிறுவனை உயிரோடு மீட்கவில்லை. அவர் மனசாட்சியோடு நடந்துகொள்ளவேண்டும் என்று சாடியிருந்தார்.
முதல்வரின் பதிலுக்கு, பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “சிறுவனை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது” என்று பிரதான எதிர்கட்சித்தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால் முதல்வர் கோபப்படுகிறார். ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா என்ற அர்த்தமற்ற கேள்விகளை கேட்கிறார். தனது தோல்வியை மறைக்க தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்விஎழுப்பவில்லை; சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தை தான் கேட்டேன் என்று அந்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தாறுமாறாக குளறுபடிகளுடன் நடைபெற்ற மீட்புப்பணி என்று டிடி நெக்ஸ்ட் என்ற பத்திரிகையில் நான் எழுப்பியது போன்றே சந்தேகங்களை அவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்காவது முதல்வர் பதில் சொல்வாரா அல்லது அந்த குழுமத்தின் மீது எரிந்து விழுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு அந்த கேள்விகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் மேற்கோள்காட்டியுள்ள கேள்விகள்:
சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவ, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டட் 12 மீட்புக் குழுக்கள் சுஜித் விழுந்த இடத்திற்கு அக்டோபர் 26ம் தேதிதான் வந்தன. சிறுவனை மீட்க ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மணி நேரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஒதுக்கிக் கொடுத்து முயற்சி செய்தார்.
➤ உயிருள்ள- ஆனால் உயிருக்குப் போராடும் குழந்தையை  ஆழ்துளைக் கிணற்றுக்குள் வைத்துக் கொண்டு மாவட ஆட்சித்தலைவர் இப்படியொரு சோதனை முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஏன்?

➤ முதல் நாள் இரவு 9 மணிக்கு அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அங்கு
வந்தார். “இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்ட வேண்டும்" என்பது
அவர் எடுத்த முடிவு. பூமிக்கடியில் பாறை இருந்ததால் அந்தக் கிணற்றைத்
தோண்ட முடியவில்லை. பாறை இருந்த இடத்தில் தோண்டுவதற்கு அமைச்சர்
 உத்தரவிட்டது ஏன்?
➤ குழந்தை விழுந்து 6 மணி நேரம் கழித்து தேசியப் பேரிடர் மீட்புப் படை
அழைக்கப்பட்டது ஏன்?
➤ அரக்கோணத்திலிருந்து 5 மணி நேரத்தில் வர வேண்டிய அந்தப்
படையினர் சம்பவ இடத்திற்கு வர 12 மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன்?
 ஹெலிகாப்டரில் அவர்களை அழைத்து வராதது ஏன்?
➤ மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத்துறை தோல்வியடையும்
வரை காத்திருந்து, பிறகு காலதாமதமாக தேசிய பேரிடர் மீட்பு படை
மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது ஏன்?
➤ தேசிய பேரிடர் மீட்புப் படை, இதுபோன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த
குழந்தைகளை மீட்கும் பணி, இதற்கு முன் செய்ததில்லை என்று அதன்
செய்தித் தொடர்பாளரே பேட்டி அளித்துள்ளதற்கு அரசின் விளக்கம் என்ன?

➤ அக்டோபர் 27-ஆம் தேதி வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் (மாநில
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் வரும்
வரை, 2 நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஒப்படைத்தது ஏன்?
மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புப் படைக்கும் "கமாண்டர்” ஆக இருக்கும் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், இரு நாட்கள் கழித்து, அக்டோபர் 27-ஆம் தேதியன்று சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தது ஏன்?  என்ற 8 கேள்விகளை ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், அனுபவம் இல்லாத தேசியப் பேரிட மீட்புப் படையை நம்பி அழைத்து, காலத்தை விரயம் செய்ததற்கு பதிலாக, ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ அழைக்காதது அதிமுக அரசின் தோல்விதானே என்று 9 வது கேள்வியையும் கூடுதலாக எழுப்பியுள்ளார்.
“இவை அனைத்தும் பொய்” என்று ஒரே போடாக போட்டுவிட்டு கடந்து போக முதல்வர் முயற்சி செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

இரண்டு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீர்...!

Image
நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக இருந்த ஜம்மு- காஷ்மீர் நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது. 
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் பிறந்தநாளான இன்று அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக அதிகாரப்பூர்வமாக பிரிந்தது. மேலும், ஜம்மு- காஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக இன்று பொறுப்பேற்கவுள்ளனர்.
credit ns7.tv

செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்தார். 
அங்கு வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருவதால், அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் அவர் கூறினார்.இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ததாக தெரிவித்தார். 
மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 
credit ns7.tv

விளையாட்டுத் துறை மீது இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு!

Image
விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் வீரர்கள் பாதிக்கப்படுப்படுவதாக, இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். 
மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிகளை, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்சினி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியதர்ஷினி, விளையாட்டில் அரசியல் தலையீடு காரணமாக, தாமும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். எத்தனை 

credit ns7.tv

தோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்!


Image
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வந்த, சுஜித் வில்சன் எனும் 2 வயது குழந்தை கடந்த அக்டோபர் 25ம் தேதி வெள்ளியன்று தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான். பின்னர் குழந்தையின் பெற்றோர் தேடியபோது, சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றினுள் விழுந்தது தெரியவந்தது.
முதலில் பத்து அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித், பின்னர் மண்ணில் இருந்த ஈரப்பதம் காரணமாக 30 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்து ஆழ்துளை கிணற்றில் விழுபவர்களை மீட்கும் மணிகண்டன் என்பவர் வரவழைக்கப்பட்டார். அவரது கருவியை பயன்படுத்தியும் சிறுவனை மீட்க முடியாத நிலையில்,
சுஜித்தின் இரு கைகளிலும் கயிற்றைக் கட்டி வெளியே இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கையில் கயிற்றை வெற்றிகரமாக கட்டிவிட்ட நிலையில் மறு கையில் கயிற்றை கட்ட முடியாததால், சிறுவனை மீட்கமுடியாமல் மீட்புக் குழுவினர் தவித்து வந்தனர்.
இதற்கிடையில், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் குழிதோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஜேசிபி இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கிவந்தன. இயந்திரங்கள் குழி தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக, ஈரமாக இருந்த மண் உள்வாங்கியதில் சிறுவன் சுஜித் 88 அடிக்கும் கீழே சென்றுவிட்டான். மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு தங்கினர்.
Sujith1
விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஆள்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழிதோண்டி அதன் வழியாக சிறுவனை மீட்கலாம் என்ற எண்ணத்தில், நெய்வேலி சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபடும் ரிக் இயந்திரம் அக்டோபர் 26ம் தேதி கொண்டுவரப்பட்டது.
Sujith2
ரிக் இயந்திரம் தோண்ட ஆரம்பித்ததும், சிறிது தூரத்தில் மண்ணின் இடையில் பாறைகள் இருந்ததால், ரிக் இயந்திரத்தால் அவற்றை உடைக்க முடியவில்லை. அதன் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் அக்டோபர் 27ம் தேதி நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே அக்டோபர் 26ம் தேதி மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிக்காக நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தடைந்தனர்.
Sujith3
மீட்பு பணிகளை துவங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்னும் அரை மணிநேரத்தில் குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டுவதற்கு பாறைகள் தடையாக இருந்ததால், ரிக் இயந்திரம் அகற்றப்பட்டு போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டு பின்னர் ரிக் இயந்திரம் மூலம் 98 அடிக்கு குழிதோண்டி சிறுவனை மீட்கலாம் என்று திட்டமிடப்பட்டது. அதனையடுத்து, போர்வெல் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 
Sujith5
ரிக் இயந்திரத்தில் இருந்த பற்கள் உடைந்ததால், மாற்று வழியை தேடும் முயற்சியில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். அதோடு, எதிர்பார்த்ததை விட பாறைகள் கடுமையாக இருப்பதாகவும், இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை என்று ஆப்பரேட்டர் கூறுகிறார். இரண்டு இயந்திரத்தை பயன்படுத்தியும் 40 அடியைக் கூட தாண்ட முடியவில்லை என்று மேலும் தெரிவித்தார். இதனையடுத்து, மீட்பு பணிகள் குறித்து பேட்டியளித்த பேரிடர் மீட்பு ஆணையர் ராதாகிருஷ்ணன் “பல தரப்பிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் ஆலோசனை வழங்கலாம்; செலவுகளை அரசே ஏற்கும்!” என்று அறிவித்தார்.
Sujith6
சுஜித்தை மீட்கும் பணிகள் மூன்று நாட்களை கடந்துவிட்ட நிலையில், 28ம் தேதி பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித்தின் மீட்புப்பணி முடிய குறைந்த பட்சம் 12 மணியாவது ஆகும். ஆனாலும் முயற்சியை கைவிட மாட்டோம், சவாலாக இருந்தாலும் மீட்புப்பணி தொடரும் என்று நேற்று அக்டோபர் 28ம் தேதி தெரிவித்தார். மேலும், "பலூன் முறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குழந்தை சுஜித் சிக்கியுள்ளான்; நான்கரை இன்ச் போர் குழியில் பலூனை செலுத்த கூட இடமில்லை!" என்று தெரிவித்தார்.
பின்னர் 28ம் தேதி 72 மணிநேரத்தை கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றின் அருகே, 98 அடிக்கு குழிதோண்டிய பின் மற்றொரு வீரர் குழிக்குள் இறங்கி பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்க முடிவு செய்யப்பட்டது. முதலில் 55 அடிக்கு ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்டபட்ட பின்னர், பாறைகளை உடைக்கும் நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் இறங்கினர். 55 அடி குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித் குமார் மண் மற்றும் பாறைகளின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார். பின்னர் ரிக் இயந்திரம் அகற்றப்பட்டு போர் வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்க திட்டமிட்டு பாறைகள் உடைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் ஏற்கனவே 75 மணிநேரத்தை கடந்துவிட்டநிலையில், ரிக் இயந்திரம் மீண்டும் தனது பணியை தொடங்கியது.
Sujith7
மீதமிருக்கும் அடிகளுக்கு குழிதோண்ட மேலும் 12 மணிநேரம் ஆகும் எனவும், பக்கவாட்டில் குழிதோண்ட 7 மணி நேரம் ஆகும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததையடுத்து அனைவரும் நம்பிக்கை இழந்தனர். இந்நிலையில், திடீரென்று ரிக் இயந்திரங்கள் தங்கள் பணியை நிறுத்தினர். இதனால் குழம்பிய செய்தியாளர்கள், மீட்புக்குழுவினரிடம் விசாரித்த போது சிறுவன் விழுந்த ஆள்துளை கிணற்றின் வழியாகவே சிறுவனை மீட்கும் முயற்சியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தனர். 
இதன் பின்னர் 29ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், 28ம் தேதி இரவு 10 மணிமுதல் குழந்தை சுஜித் விழுந்த குழியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து குழந்தை சுஜித் உயிரிழந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது. 88 அடி ஆழத்தில் இருக்கும் சிறுவனின் உடலை முழுமையாக மீட்கும்
பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு 29ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுஜித்தின் உடல் சிதைந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறாய்விற்குப் பிறகு சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sujith8
சுஜித் மீட்கப்பட்டதற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மாவட்ட ஆட்சியர்  சிவராசு, மீட்புப்பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று காலை 8 மணிக்குள் மூடப்படும் என்று தெரிவித்தார்.
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நாள் முதல் இறுதி நாள் வரை அனைத்து தரப்பு மக்களும் சுஜித் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று மனதார வேண்டினர். எனினும், அனைவரது வேண்டுதல்களும், மீட்புக்குழுவினரின் 80 மணிநேர போராட்டமும் பலனின்றி தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் உயிரிழந்ததையடுத்து #RIPSujith, #SorrySujith மற்றும் #SujithWilson ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீரில் ஆய்வு...!

credit ns7.tv
Image
இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீர் சென்று இன்று  பார்வையிடவுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை அந்த குழு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்பின் போது காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்நிலையில் ஐரோப்பிய குழு இன்று காஷ்மீர் சென்று, அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிய உள்ளனர்.
இதனிடையே ஐரோப்பிய குழு ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீநகர் அருகே சோபோர் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி நடத்திய தாக்குதலில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாக்குதல் நடைபெற்ற பகுதியை பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

உயிருக்கு போராடும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்!


Image
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உயிருக்கு போராடுவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று Kot Lakhpat சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை காரணமாக அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே கடந்த சனிக்கிழமை நவாஸ் ஷெரிப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவரின் நிலை சிறிது சிறிதாக மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனிடையே 3வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக அவரின் குடும்ப மருத்துவர் அத்னன் கான் தகவல் வெளியிட்டுள்ளார்.
69 வயதான நவாஸ் ஷெரிப் ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்படுகிறார். (பாகிஸ்தானில் பஞ்சாப் என்ற மாநிலம் உள்ளது). நவாஸின் சிறுநீரகம் மோசமடைந்ததன் காரணமாக ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் அளவு ஆபத்தான முறையில் குறைந்திருப்பதாக மருத்துவர் அத்னன் கான் கூறியுள்ளார். ஒரே நாளில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை 45,000ல் இருந்து 25,000ஆக குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஷெரிபுக்கு தொடர்ந்து அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சையில் மற்றொரு பிரதமர்: 
abbasi
நவாஸ் ஷெரீப்பை தொடர்ந்து ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு பாகிஸ்தான் பிரதமரான ஷாகித் ககான் அபாஸியின் (வயது 60) உடல்நிலையும் மோசமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. Adalia சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபாஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

credit ns7.tv

இந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது - தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம்

இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாக, தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டங்களை எளிமையாக்குதல் மற்றும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்ட பிறகும், தேர்வு முடிவு வெளியாகும் போது சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவிர்க்க இயலாததாக உள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி, உலகில் அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 2,646 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்தியாவில் மட்டுமே இளம் வயதில் மாணவர்கள் கடினமான பாடத்திட்டங்களை எதிர்கொள்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கடினமான நேரத்தில், பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்றும் கல்வி திட்டத்தில் மேலும் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

credit ns7.tv

திங்கள், 28 அக்டோபர், 2019

அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை!

Image
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்தன. அதன்பேரில், தமிழக அரசு போக்குவரத்து துறை சிறப்பு குழுக்களை அமைத்து அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது, பயணிகள் அளித்த புகாரின் பேரில், சிறப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டது. 
பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை வாங்கிக் கொடுத்த அதிகாரிகள், ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதுவரை 27 லட்சம் ரூபாய் இணக்க கட்டணமும், ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வரியாகவும் வசூலித்துள்ளனர். 

credit ns7tv

தேர்தல் நடத்தை விதிகளில் சட்டத்துறை திருத்தம்!

தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டுமே தற்போது தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க உரிமை வழங்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சகம், 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதனையடுத்து இனிவரும் தேர்தல்களில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவம் மூலம் தங்களின் வாக்குகளை தபால் மூலம் அளித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றலாம். 
credit ns7.tv

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்க வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

Image
மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வராவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2-வது நாளாக நடைபெற்று வரும் அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.ரங்கராஜன், மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும், மருத்துவம் படிக்கவே அதிக செலவாகும் போது மருத்துவர்களுக்கு குறைந்த ஊதியம் தருவது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். 
மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு அவர்களின் கோரிக்கையை உடனே ஏற்க வேண்டும் என்றும், இல்லாவிடில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

credit ns7.tv

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி!

Image
சென்னையில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக பணியில் உள்ள பிற பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 
இந்தப் போராட்டத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் அவதியடைந்துள்ளனர். 
credit ns7.tv

குழந்தை சுஜித்தை மீட்க பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடக்கம்!

credit ns7.tv
Image
ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்து வரும் குழந்தை சுஜித்தை மீட்க, ராட்சத இயந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டுவருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்படி கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் மாலையில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் கொடுத்து,  குழந்தை சுஜித்தை மீட்க முயன்றனர். குழந்தை முதலில் 26 அடியில் சிக்கிய நிலையில் பின்னர் 85 அடி ஆழத்துக்கு சென்றது. இதையடுத்து இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தது. இதனால் குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி நடுக்காட்டுப்படி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் 100 அடிக்கு குழி தோண்டி, அதில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குழியின் பக்கவாட்டில் 3 நபர் கொண்ட ஊழியர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டு வரும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் தோண்டி குழநதையை மீட்கும்போது, குழந்தை மேலும் கீழே சென்றுவிடாமல் தடுக்க நடவடிக்கின்றனர். 
இதனிடையே குழந்தை சுஜித் சுவாசித்து வருவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரித்துள்ளார். பக்கவாட்டில் 2 மணி நேரத்தில் 90 அடி வரை குழி தோண்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகமே சுஜித் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறது. 

சனி, 26 அக்டோபர், 2019

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!

Image
ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாத காரணத்தால், அதில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
➤2009 பிப்ரவரி 22-ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிந்தான். 
➤அதே ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலாமாக மீட்கப்பட்டான். 
➤2011 செப்டம்பர் 8-ஆம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான்.  
➤2012 அக்டோபர் ஒன்றாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா, உயிருடன் மீட்கப்பட்டான்.  
➤2013 ஏப்ரல் 28-ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.  
➤அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி உயிரிழந்தார்.  
➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா, பல மணி போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
➤அதே ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.  
➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. 
➤2015ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
➤2018ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டார்.
தற்போது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, குழந்தையை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. 

credit ns7.tv

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை; 14 மணி நேரமாக போராடும் மீட்புக்குழுவினர்...!

Image
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்தை கடந்தும் நீடித்து வருகிறது.
நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பிரிட்டோ ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது மகன் சுஜித் வின்சென் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு இருந்ததை அறியாத குழந்தை அதில் தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த பெற்றோர், ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், குழந்தை 27 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வால், குழந்தை கிணற்றில் இறங்கியதால், பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். 
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையின் கைகளில் கயிறை சுருக்கு போட்டு மேலே தூக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் குழந்தையை மீட்க, மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தயாரித்த ஆழ்துளை ரோபோ பயன்படுத்தப்பட்டது. அப்போது குறிப்பிட்ட ஆழத்திற்கு சென்ற ரோபோ ஆழ்துளை கிணற்றின் விட்டம் குறைவாக இருந்ததால், அதற்கு கீழே இறங்காமல் போனது. இந்த முயற்சி தோல்வி அடைய மீண்டும் குழந்தையின் கைகளில் சுருக்கு போட்டு தூக்க முயற்சித்தனர்.
ஆழ்துளை கிணற்றிலிருந்த குழந்தைக்கு தைரியம் அளிப்பதற்காக அவரது தாய் அவ்வப்போது ஆறுதல் கூறியது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், பொதுமக்களையும் கலங்கச் செய்தது. இந்த சமயத்தில் மீட்பு படையினர் அனுப்பிய கயிறு குழந்தையின் இரு கைகளிலும் சுருக்கு விழ உடனடியாக குழந்தையை மெதுவாக தூக்க தொடங்கினர். அப்போது ஒரு கையில் விழுந்திருந்த சுருக்கு அவிழ்ந்ததால் தொடர்ந்து குழந்தையை மேலே தூக்க முடியாமல் போனது. 
வேறு வழியின்றி மீண்டும் பக்கவாட்டில் நாலா புறமும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வால், 27 அடியில் சிக்கியிருந்த குழந்தை 31 அடிக்கு கீழே சென்ற நிலையில், பள்ளம் தோண்டும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் கோவையில் இருந்து வந்த மீட்பு படையினர் நவீன கருவிகள் உதவியுடன் மீட்க முயற்சித்தும் அதுவும் பலனளிக்காமல் போனது. மேலும் குழந்தையின் கையில் கட்டப்பட்டிருந்த சுருக்கு கயிறு அவிழ்ந்ததால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் நாமக்கல்லைச் சேர்ந்த ஐஐடி மீட்பு குழுவினர் நவீன கருவிகள் உதவியுடன் குழந்தையை மீட்க போராடினர். ஆனால் ஆழ்துளை கிணற்றின் விட்டம் குறைவாக இருந்ததால் கருவியை குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இறக்க முடியவில்லை. இதனிடையே 31 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு சென்றதாகவும், குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவி கோரப்பட்டதாகவும் ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்

credit ns7.tv

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்!

Image
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் 2010ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்துள்ளது.
தண்ணீர்த் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்காக 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்தக் கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனைத் தோண்டிய ஒப்பந்ததாரரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
புதிய ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம், அதனை அமைப்பவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதுபற்றி எழுத்து மூலமாக சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். 
ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூடும் விதமாக இரும்பு மூடி ஒன்றையும் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், ஆழ்துளை கிணறுகள் பற்றிய விரிவான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

credit ns7.tv

ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி...!


Image
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் தான், இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடைபெற்று தமிழர்களின் பெருமை உலக அரங்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து தான்,  சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞரான பானர்ஜி, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் தாமிரபரணி கரை ஆதிச்சநல்லூர் நாகரீகம் என உறுதியளித்தார். இந்த வரலாற்றுப் பெருமையை அறிந்த  நியூஸ் 7 தமிழின் உளவுப்பார்வைக் குழுவினர், தமிழர்களின் வரலாற்றுப் பெருமையும், நாகரீக தொட்டிலும் புதைந்து கிடைக்கும் சிவகளைக்கு நேரில் சென்று அதன் பெருமைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தது.  
இதற்கிடையில், 2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு அறிக்கை 15 ஆண்டுகளை கடந்தும் வெளியிடப்படவில்லை என்றும் உடனடியாக அடுத்தக்கட்ட ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில ஆய்வு செய்ய மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டது. தற்போது, அதற்கான அனுமதியை, மத்திய அரசு அளித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில், விரைந்து ஆய்வுப்பணியைத் தொடங்குவதுடன், அங்கு உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு செய்வதால், தமிழர்களின் தொன்மை  மீண்டும் உலகிற்கு தெரிய வரும் என திடமாக நம்புகின்றனர். மேலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு மாணவ மாணவிகளை அழைத்து சென்று தமிழர்களின் பெருமைகளை எடுத்துக்கூற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

credit ns7.tv

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளனர் - உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு(2019) இதுவரை முடிந்துள்ள பருவமழை காலத்தில் 22 மாவட்டங்களில் உள்ள 26 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெள்ளம் மற்றும் மழை சம்பந்தப்பட்ட காரணங்களால் 2155 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணங்களால் மஹாராஷ்டிர மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக அம்மாவட்டத்தில் 430 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 227 பேரும் உயிரிழந்துள்ளனர். அதோடு, மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இந்தியாவில் உள்ள 361 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 803 பேர் காயமடைந்துள்ளதாகவும், 20000க்கும் மேற்பட்ட வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் 2.23 லட்சம் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 2.06 லட்சம் வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 14.09 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் 30 தேதி அதிகாரப்பூர்வமாக பருவமழைகாலம் முடிவடைந்த நிலையில், சில மாநிலங்களில் பருவமழைகாலம் இன்னும் முடிவடையவில்லை. ஜூன் முதல் செப்டம்பர வரையிலான 4 மாத காலத்தில் கடந்த 1994ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தின் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 430 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 398 பேர் காயமடைந்ததோடு, 7.19 லட்சம் மக்கள் , 305 நிவாரண முகாம்களில் தங்கும் நிலமைக்கு உள்ளாகினர்.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை, 227 பேர் உயிரிழந்துள்ளதோடு, 37 பேர் காயமடைந்துள்ளனர். நான்கு பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பருவமழைகாலத்தில் இம்மாநிலத்தில் 280 நிவாரண முகாம்களில் 43,433 பேர் தங்கவைக்கப்பட்டனர்.
பீகாரைப் பொறுத்தவரை, 166 பேர் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 1.96 லட்சம் பொதுமக்கள் 282 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை, 189 பேர் உயிரிழந்துள்ளதோடு, 39 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 32,996 பொதுமக்கள், 38 மாவட்டங்களில் உள்ள 98 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

கேரளாவை பொறுத்தவரை, 181 பேர் உயிரிழந்துள்ளதோடு, 72 பேர் காயமடைந்துள்ளனர். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 4.46 லட்சம் பொதுமக்கள் 2,227 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தை பொறுத்த வரை 192 பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 பேர் காயமடைந்துள்ளனர். இம்மாநிலத்தில் மொத்தம் 22 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 17,783 பொதுமக்கள் 102 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலத்தை பொறுத்த வரை 285 பேர் உயிரிழந்துள்ளதோடு, 49 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு, 6 பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 16 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 2.48 லட்சம் பொதுமக்கள் 3,261 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்த வரை 101 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, 6 பேர் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 5.35 லட்சம் பொதுமக்கள் 1,357 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit ns7.tv

வெள்ளி, 25 அக்டோபர், 2019

மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை!

Image
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை நிறுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களாக கமல்ஹாசன் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து அவரது ட்விட்டர் பதிவு போலவும், சீனப் பிரதமருக்கு கவிதை எழுதியது போலவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ள கட்சி நிர்வாகம், எங்கள் கட்சி தலைவரின் பலத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் விஷம பிரச்சாரத்தை செய்வதாகவும், இது போன்ற நாகரிகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது. 
மேலும் இது போன்ற விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி தொடர்பான விஷம பிரச்சாரங்கள் பரவினால் உடனடியாக கட்சி தலைமைக்கு தெரிவிக்குமாறு தொண்டர்களுக்கு கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

credit ns7.tv

யார் இந்த துஷ்யந்த் சவுதாலா?

Image
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திராத நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணிசமான தொகுதிகளை வென்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி மீது ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் கவனமும் திசை திரும்பியிருக்கிறது. இந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களே ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
90 தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. 21ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு சாதகமாக இருந்த நிலையில் அங்கு பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை பெற முடியாமல் முக்கிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் தவித்து வருகின்றன. ஹரியானா தேர்தலில் மூன்று கட்சிகளே முக்கியத்துவம் பெற்று வலம் வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி 38 தொகுதிகளில் பாஜகவும், 34 தொகுதிகளில் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன. போட்டி மிகவும் பலமாக இருந்தாலும் ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஜனநாயக ஜனதா கட்சியின் (JJP) தலைவராக இருப்பவர் துஷ்யந்த் சவுதாலா. இதற்கும் கடந்த ஆண்டின் இறுதியில் தான் இக்கட்சியே தொடங்கப்பட்டிருக்கிறது. 
துஷ்யந்த சவுதாலா, இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப் பேரனாவார், அதே போல இவரின் துஷ்யந்தின் தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்திருக்கிறார். துஷ்யந்தின் தந்தை அஜய் சவுதாலவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரின் குடும்பமே இரு அரசியல் குடும்பமாகும்.
சவுதாலா குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக குடும்பக் கட்சியான இந்திய தேசிய லோக் தளத்திலிருந்து தனியாக பிரிந்து சென்ற துஷ்யந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் தான் ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கியிருக்கிறார். தேவி லாலால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) தலைவராக இருப்பவர் துஷ்யந்த சவுதாலாவின் தாத்தாவான ஓம் பிரகாஷ் சவுதாலா. 
ஓம் பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது, நடைபெற்ற ஆசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார். இதே வழக்கில் இவரின் மூத்த மகன் அஜய் சவுதாலாவும் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா சிறைக்கு சென்ற போது இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு பொறுப்புத் தலைவராக அவரின் இளைய மகன் அபய் சவுதாலா தேர்வானார். சித்தப்பா அபயுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவே கட்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் துஷ்யந்த்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் துஷ்யந்த்.
தற்போது ஹரியானாவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்திற்கு வந்துள்ளார் துஷ்யந்த் சவுதாலா..
2014 நாடாளுமன்ற தேர்தலில் ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் வெற்றி பெற்று இந்தியாவின் மிக இளம் வயது எம்.பி என்ற பெருமையை பெற்ற துஷ்யந்திற்கு தற்போது வயது 31.

credit ns7.tv