செவ்வாய், 11 செப்டம்பர், 2018

தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பலி! September 11, 2018

Image


தெலங்கானா மாநிலம் கொண்டாகட்டு எனும் பகுதியில் மலைச்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பலியாகியுள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜாக்தியால் மாவட்டத்தில் கொண்டாகட்டு பகுதியின் மலை மீது உள்ள ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும்.

இன்று காலை கொண்டாகட்டு ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு 60 பயணிகளுடன் ஒரு அரசுப் பேருந்து மலைச்சாலையில் திரும்பிக்கொண்டிருந்தது. அதில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வளைவு ஒன்றில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத வகையில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக பலியாகினர். இறந்தவர்களில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது. 6 குழந்தைகளும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக பேருந்தில் சிக்கி காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்களாலும், காவல்துறையினராலும் மீட்கப்பட்டு அருகிலிக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விபத்து குறித்து அறிந்த தெலங்கானா முதல்வர் அதிர்ச்சியையும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.