பதவி ஏற்ற 4 ஆண்டுகளில் எந்த ஒரு வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியினருடன் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதிக்கு சென்ற ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராகுல்காந்தி தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், சரத்பவார், சரத் யாதவ், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவோ, விவசாயிகளின் நிலை பற்றியோ, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றியோ பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என குற்றம் சாட்டினார். பிரதமர் தனது முதலாளி நண்பர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை கண்டு கொள்வதே இல்லை என்றும் குற்றஞ்சாட்டிய ராகுல்காந்தி, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் என்றும் குறிப்பிட்டார். எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாகவும் ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.