செவ்வாய், 11 செப்டம்பர், 2018

விபத்தில் சிக்கிய காரை புதிய கார் என்று ஏமாற்றி விற்பனை செய்த டாடா ஷோரூம் டீலர்! September 11, 2018

Image

ஷோரூம்களுக்கு சென்று புதிய கார்கள் வாங்குவது வாடிக்கையான நிகழ்வு ஆனால் அதே ஷோரூம்களில் பழைய காரை புதிய கார் எனக் கூறி ஏமாற்றி வாடிக்கையாளரிடம் விற்பனை செய்திருப்பது ஷோரூம்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்கும் விதமாக உள்ளது.

சண்டிகர் மாநிலத்தின் பஞ்ச்குலாவில் செக்டார் 16ஐ சேர்ந்தவர் அதுல்குமார் அகர்வால், கடந்த 2015 ஜனவரி 10 அன்று பனாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் என்ற டாடா நிறுவன கார் டீலரிடம் இருந்து 3.61 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை வாங்கியுள்ளார்.

புதிதாக அவர் வாங்கிய அந்த டாடா காரில் வாங்கப்பட்டதில் இருந்தே பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனால் அதே ஆண்டு பிப்ரவரி 8 அன்று காரை முதல் சர்வீஸுக்காக டாடாவின் சர்வீஸ் செண்டருக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இது போல் பல முறை சர்வீஸ் செண்டருக்கு அதுல் தனது காரை எடுத்துச் சென்ற நிலையிலும் காரில் ஏற்பட்ட பிரச்சனை சரிசெய்யப்படாமலே இருந்ததால் அதுல் வேறுவழியின்றி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டார்.

இதனைத்தொடர்ந்து PEC தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஒன்று சண்டிகரில் கடந்த 2017 நவம்பர் 30 அதுல்குமாரின் காரை பரிசோதனை செய்தது. அக்குழுவினரின் ஆய்வின் முடிவில் காருக்கான உதிரிபாகங்களான டர்போசார்ஜர், இஞ்ஜெக்டர் மற்றும் பைப்லைன்கள், ஆல்டர்னேட்டர் ஆகியவற்றை புதிதாக மாற்றிய போதும் வாடிக்கையாளர் கூறியது போல கரும்புகை வெளியாகும் பிரச்சனை இருந்துள்ளது. மேலும் வாகனம் ஸ்டார்ட் ஆவதிலும் பிரச்சனை இருந்துவந்துள்ளது.

பின்னர் பல கட்ட விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பன்சாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் அதுலிடம் விபத்தில் சிக்கிய பழைய காரை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் பெர்க்லீ சர்வீஸ் செண்டர் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.

இந்த வழக்கில் தவறு செய்தது பழைய காரை புதிய கார் என்று விற்பனை செய்த ஷோரூம் நிர்வாகத்தினரே என்பதால் பனாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்ட அதுல் கார் வாங்க செலுத்திய 3.61 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பச் செலுத்த வேண்டும் அல்லது பழைய காருக்கு பதிலாக புதிய காரை கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.