வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மணிகண்டன், அரசின் திட்டங்களை ஏளனப்படுத்தும் நோக்கில், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் படங்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார்.
வரும் ஜனவரியில் +1, +2, மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் போன்று, காலை உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இதுகுறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.