புதன், 2 அக்டோபர், 2019

கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜிஎஸ்டி வருவாய் வெகுவாக குறைவு...!

Image
நம் நாட்டில் பொருளாதார மந்தம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜிஎஸ்டி வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. 
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டியாக 16 ஆயிரத்து 630 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டியாக 22 ஆயிரத்து 598 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 45 ஆயிரத்து 69 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'செஸ்' எனப்படும் கூடுதல் வரியாக ஏழு ஆயிரத்து 620 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் நிகழாண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் இரண்டு புள்ளி ஆறு ஏழு சதவீதம் சரிந்துள்ளது என நிதியமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு 37 ஆயிரத்து 761 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 37 ஆயிரத்து 719 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 19 மாதங்களில் செப்டம்பர் மாதத்தில் தான் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள நிலையில், நாட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்ததே இதற்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால் இம்மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
credit ns7.tv