புதன், 2 அக்டோபர், 2019

சிதிலமடைந்து கேட்பாரற்ற நிலையில் இருக்கும் காந்தியின் நினைவு மண்டபம்!

credit ns7.tv
Image
தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் கன்னியாகுமரியில் உள்ள அவரது நினைவு மண்டபம் இடியும் தருவாயில் சிதிலமடைந்து கேட்பாரற்ற நிலையில் உள்ளது. 
காந்தியின் கனவுகளை நனவாக்குவோம் இந்த குரல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒலித்து கொண்டே தான் இருக்கின்றன. தேசத்தந்தையின் வார்த்தைகளை அடியொற்றி இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பது தான் ஒரு தரப்பினரின் விருப்பமும். ஆனால் அந்த காந்தியின் புகழை பரப்பும் வகையில் குமரியில் உருவாக்கப்பட்ட காந்தி மண்டபம் இன்று கேட்பாரற்று சிதிலமடைந்து கிடப்பது தான் வேதனை.
மகாத்மா காந்தியின் மறைவிற்கு பின்னர் அவரது அஸ்தி கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்ட இடத்தில் 1956 ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் செயல்பட துவங்கியது. இதுவரை சில முறை மட்டுமே பராமரிப்பு வர்ணம் பூசும் பணிகள் நடந்துள்ளன. தற்போது கடற் காற்று காரணமாக மண்டபத்தின் பல இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுவர்கள் சிதலமடைந்து தொடர்ந்து சேதமான பாகங்கள் கீழே விழுந்து வருகிறது. 
தற்போது உள்ளே சுற்றுலா பயணிகள் நுழைய அச்சப்படும் நிலையில் உள்ளது. அண்ணல் காந்தியின் நினைவு மண்டபம் இன்று பாழடைந்து போகும் நிலை ஏற்படும் முன்பு அதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.