புதன், 2 அக்டோபர், 2019

தேநீரிலும் பிளாஸ்டிக் ; அச்சுறுத்தும் அபாயம்...!

credit ns7.tv
Image
டீத்தூள் பைகளில் இருந்து கோடிக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அருந்தும் தேநீரில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. 
எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக் என உலகமே பிளாஸ்டிக் மயமாகி இருக்கிறது. ஆழ்கடல், மணல், பனிப்பாறை என எங்கும் நீக்கமற பரவி வரும் பிளாஸ்டிக், நம் உணவையும் விட்டுவைக்கவில்லை. மனிதர்கள் வாரம் ஒன்றுக்கு 5 கிராம் பிளாஸ்டிக் உட்கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கையை அரசுகள் மேற்கொண்டு வந்த போதும், இதுநாள் வரை கட்டுப்பாடுகள் இன்றி நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் அச்சுறுத்தி வருகிறது. புத்துணர்ச்சிக்காக நாம் அருந்தும் டீத்தூள் பாக்கெட்டுகளில் இருந்து கோடிக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதாக கனடா நாட்டின் ஆய்வு ஒன்று பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மெக்கில் பல்கலைகழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் டீ பைகளை கொதிக்கும் நீரில் போட்ட போது, அந்த பைகளுக்கு சீல் வைக்க பயன்படுத்திய பாலிப்ரோப்லியின் (Polypropylene) வெந்நீரில் கோடிக்கணக்கான மைக்ரோ மற்றும் நேனோ பிளாஸ்டிக் துகள்களை வெளியேற்றி வருவது தெரியவந்துள்ளது. அந்த பைகளில் இருந்து டீ தூள்களை மட்டும் பயன்படுத்தியபோது பிளாஸ்டிக் பொருட்கள் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. 
உணவுப் பொருட்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இதுவரை ஆய்வு ரீதியாக தெரியவில்லை என்றாலும் பாதிப்புக்கள் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தற்போது குடிநீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் அளவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் எங்கும் நிறைந்து இருக்கும் பிளாஸ்டிக்கை உண்பதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பாதிப்புகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.