மத்திய அரசு வழங்கிய நிர்பயா நிதியில் 2 கோடிகளை மட்டும் பெங்களூரு மாநகர போக்குவரத்து துறை இதுவரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு வழங்கிய 33.64 கோடி ரூபாயில் வெறும் 2.37 கோடி ரூபாய்களை மட்டும் பெங்களூரு போக்குவரத்துத் துறை செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிர்பயா நிதியின் மூலம் பின்க் சாரதி வாகனம் என்ற வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைத்தால், பின்க் சாரதி வாகனத்தில் வரும் அதிகாரிகள் தேவையான உதவியை செய்வார்கள். தேவைப்பட்டால் காவல்துறையினரின் உதவியையும் நாடுவார்கள். இந்த திட்டம் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியால் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த வாகனம் குறித்த விழிப்புணர்வோ, தேவைப்பட்டால் எந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்பது பற்றியோ பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு போக்குவரத்துத்துறை இயக்குநர் ஷிகாவிற்கு சமூக ஆர்வலர் யோகீஷ் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில்“நிர்பயா நிதி ஏன் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இரவு 8 மணி முதல் காலை 1.30 வரை இயக்கப்படும் ஏசி இல்லாத பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் இன்னும் பொருத்தப்படாமலேயே இருக்கிறது. ஏசி பேருந்துகளில் மட்டும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது. இரவில் இயக்கப்படும் 145 பேருந்துகளில் 130 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. மத்திய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது. பெண்களுக்கென்று தனியே கழிவறை இல்லை. பெங்களூரு போக்குவரத்துத் துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு ஏன் நிர்பயா நிதி பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்று விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்துத் துறை பாதுகாப்பு மற்றும் லஞ்சஒழிப்புத்துறை இயக்குநர் அனுபம் அகர்வால், “பெண்களுக்கென சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த கோரிக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டுவிட்டது. 1000 சிசிடிவி கேமராக்களை பேருந்துகளில் பொருத்துவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த நிதி பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது. தற்போது இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் தருகிறோம். பெண்கள் பாதுகாப்புக்கென புதிய செயலி ஒன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. அதன் முதல் பதிப்பை அக்டோபர் மாதத்தில் வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கென 2016-2017ம் ஆண்டு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 33.64 கோடியை ஒதுக்கியது. 2019ம் ஆண்டு வரை அந்த நிதியில் இருந்து 2.37 கோடி ரூபாய் தான் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv