வியாழன், 3 அக்டோபர், 2019

சிறுமிக்கு மூளை வீக்க நோய் பாதிப்பு: உஷார் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்!

credit ns7.tv
Image
கர்நாடக மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் மூளை வீக்க நோயால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம், சிகரகனே லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் தனம்மா ஹுகர். இவர் மூளைவீக்க நோய் அறிகுறிகளுடன் பிஎம் பாட்டில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அவ்வபோது வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நோய் தாக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கழித்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தனம்மா நோயின் தாக்கம் தீவிரமானதால் உயிரிழந்தார்.
“சிறுமியின் உடலில் ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து சோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமிக்கு ஜப்பான் மூளைவீக்க நோய்(Japanese encephalitis) இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று விஜயபுரா மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மகேந்திர கப்சே தெரிவித்துள்ளார்.
மூளை மற்றும் தண்டுவடத்தில் சுரக்கும் செரிப்ரோஸ்பைனல் திரவம் சிறுமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு மணிப்பாலுக்கு அனுப்பப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் தான் சிறுமிக்கு இந்த தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
சிறுமியின் உயிரிழப்பிற்குப் பிறகு உஷாரான மாவட்ட நிர்வாகம் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக, நச்சு வாயுவை பரப்புதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல், கழிவு நீர் தேங்காமல் பாதுகாத்தல் உள்ளிட்ட எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். மேலும், கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறோம். கொசுக்கள் கடித்தால் உடனடியாக கவனித்து அதற்குறிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளோம் என்று மகேந்திர கப்சே தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஜப்பான் மூளைவீக்கநோயால் ஒருவர் இறப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு 2006ம் ஆண்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூளை வீக்க நோயானது மலேரியா, டெங்கு காய்ச்சலைப்போல கொசுக்களால் உருவாகும் மற்றொரு நோயாகும். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது ஃப்ளாவிவைரஸஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் தான். இந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ்களால் டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், வெஸ்ட் நைல் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.
இந்த நோய் இருப்பதற்கான அறிகுறிகள் வைரஸ் தாக்கிய கொசு கடித்த 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு தென்படும். தலைவலி மற்றும் கடுமையான காய்ச்சல் தான் இந்த நோயின் பொதுவான அறிகுறி. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்த நோயால் உடனடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். இந்த நோய் தாக்கியவுடன் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் கழுத்துப் பிடிப்பு ஏற்படும். மேலும், இந்த அறிகுறிகள் ஏற்படும் 30% குழந்தைகள் ஜப்பான் மூளைவீக்க நோய்க்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த நோயிலிருந்து மீண்டவர்களிடம் நடத்தை மாற்றம், தொடர்ச்சியான வலிப்புத்தாக்கங்கள் அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான மற்றும் நிரந்தர நரம்பியல் குறைபாடுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நோய்க்கு இன்னும் முழுமையான மருத்துவம் கிடையாது. நோய் அறிகுறியின் தாக்கத்திற்கேற்பவே சிகிச்சை முறைகள் செய்யப்பட்டுவருகின்றது. இந்த வைரஸுக்கு எதிராக இதுவரை 4 தடுப்பூசிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தடுப்பூசிகள் தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. இவைகள் இந்த நோயின் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சிறுமி உயிரிழந்ததும் கர்நாடக சுகாதாரத்துறை விழிப்படைந்திருப்பதற்கு காரணம் இந்த நோய் ஏற்படுத்தும் தாக்கம் தான். கடந்த 2017ம் ஆண்டு இதே மூளை வீக்க நோயால் உத்தரபிரதேசத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், இந்த ஆண்டு பீகாரில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நோயினால் 44,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 6000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக பருவமழைக்காலம் முடிந்ததும் இந்த நோய் பரவக்கூடியது என்பதால் சுகாதாரத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.