செவ்வாய், 8 அக்டோபர், 2019

சீன அதிபரின் மாமல்லபுர வருகைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு...!

சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழகம் வர உள்ள நிலையில், அவரை மனமார வரவேற்பதாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தியத் திருநாட்டைப் போலவே, பழம்பெருமையும், நாகரிகமும் கொண்ட சீன தேசத்தின் அதிபர் ஜி ஜின்பிங், தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்வதாகவும், அவரை வருக வருக என மனமார வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகளும், வணிகத் தொடர்புகளும் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், சீன தேசத்துடன் வர்த்தகம் செய்தவர் தமிழ்மன்னர் மாவீரர் இராசராச சோழன் என கூறியுள்ளார். 
சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும், பிரதமர் நரேந்திர மோடியும் இருநாட்டு நல்லுறவுக்கான பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்துவது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்லாது, உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

credit ns7.tv