மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வித்தியாசமான கல் எறியும் திருவிழாவில் கற்கள் தாக்கியதில் 400க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காயமடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ‘ஜாம்’ (jaam) என்ற நதி ஒன்று பாய்ந்து ஓடிவருகிறது. இதன் இரு கரைகளில் உள்ளவை பந்தூர்னா மற்றும் சவரகோன் கிராமங்கள். இந்த இரு கிராமத்தினரும் சுமார் 400 ஆண்டுகளாக gotmar Fair என்ற திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டிற்கான gotmar Fair திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா மிகவும் நூதனமான முறையில் கொண்டாடப்படுவதாகும்.
நூதன திருவிழா கொண்டாடப்படும் விதம்:
இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஜாம் நதியின் இருகரைகளில் திரண்டிருப்பர். ஆற்றின் நடுவில் கம்பத்தில் கொடி ஒன்று நடப்பட்டிருக்கும். இந்த கொடியை யார் எடுக்கிறார்களோ அந்த கிராமமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இருப்பினும் அந்தக் கொடியை எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடியை எடுத்து விடாமல் தடுக்க எதிர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கற்களை எறிந்து முறியடிப்பார்கள்.
இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் பந்தூர்னா கிராமத்தினர் கொடியை கைப்பற்றி வெற்றி பெற்றனர்.
இத்திருவிழாவில் இருதரப்பினரையும் சேர்த்து கற்கள் தாக்கியதில் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 12 பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டதாகவும், இருவருக்கு கண்களில் அடிபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு பந்தூர்னா கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் மொழியில் ‘got’ என்றால் கல். ‘mar’ என்றால் எறிதல். எனவே gotmar என்றால் கல் எறிவது என்று பொருள்..
நூற்றாண்டுகளுக்கு முன்னதாக பந்தூர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், அவர் காதலித்த சவரகோன் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஜாம் நதியை கடந்த போது அவர்கள் இருவரையும் கற்களை கொண்டு தாக்கியதாகவும், அப்போது பந்தூர்னா கிராமவாசிகள் அவர்களை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதன் நினைவாகவே இத்திருவிழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
நூற்றாண்டுகள் பழமையான gotmar திருவிழாவை இந்தாண்டு ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணித்ததாக சிந்த்வாரா காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ராய் தெரிவித்தார்.
credit ns7.tv