ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

லேண்டரை தொடர்பு கொள்ள 14 நாட்களும் முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர்

source ns7.tv
Image
நிலவில் தரையிறங்கும்போது, சிக்னல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள, 14 நாட்களும் முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி, கடைசிக்கட்ட நேரத்தில் தோல்வியடைந்தது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் வந்து கொண்டிருந்தபோது, பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், லேண்டரின் தற்போதைய நிலை குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. 
இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி:
இந்நிலையில், பெங்களூருவில் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றியடைந்து விட்டதாகவும், இதனால் திட்டம் தோல்வி என்றோ, பின்னடைவாகவோ கருத முடியாது என்றார். 
லேண்டரின் ஆயுட்காலமான 14 நாட்களும், அதனை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அவர், நிலவை சுற்றிவரும் ஆர்ப்பிட்டரில் உள்ள கருவிகள் மூலம் லேண்டரின் இருப்பிடத்தை அறிய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். 
ஆர்ப்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டு என்றாலும், கூடுதல் எரிபொருளால் அதனை சுமார் ஏழரை ஆண்டுகள் வரை செயல்பட வைக்க முடியும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார். 
ஆர்ப்பிட்டரின் நவீன கேமரா எடுத்தனுப்பும் படங்கள், நிலவு குறித்த பல்வேறு ஆய்வுகளுக்கு உதவும் என்றும், நிலவு தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து முனைப்பு காட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.