புதன், 4 செப்டம்பர், 2019

காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 24,100 கன அடியாக அதிகரிப்பு...!

Image
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 24 ஆயிரத்து 100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை காரணமாக, கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. கபினி  அணையில் இருந்து 12 ஆயிரத்து 25 கனஅடி நீர், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 12 ஆயிரத்து 75 கனஅடி நீர் என மொத்தம் 24 ஆயிரத்து 100 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 10 ஆயிரத்து 235 கன அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து  திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்இருப்பு 87.074 டிஎம்சி ஆக உள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.2 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக 18 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது

credit ns7.tv