கிழக்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்காக இந்தியா சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடன் அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்று வரும் உலகின் கிழக்குப் பகுதி நாடுகளுக்கான பொருளாதார அமைப்பு மாநாட்டில் உரையாற்றிய நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். கிழக்காசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் தனது அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார கொள்கையிலும் புதிய அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார்.
அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி எனும் தாரக மந்திரத்தை தனது அரசு கொண்டிருப்பதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, வரும் 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதாரத்தை இந்தியா அடைய வேண்டும் என்பதே தனது அரசின் இலக்கு என்றார்.
கிழக்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு தொன்மையானது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, விளாடிவோஸ்டோக் நகரில் துணைத் தூதரகத்தை அமைத்த உலகின் முதல் நாடு இந்தியா என்றும் தெரிவித்தார்.
credit ns7,tv