22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக முப்பதாயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 753 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து 55 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப்போரால் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை இன்னமும் குறையவில்லை. சர்வதேச அளவிலான பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, நிலையற்ற பங்குவர்த்தகம் போன்றவற்றால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு மூவாயிரத்து 640 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு, தொழில்துறை வளர்ச்சியடைந்தால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv