புதன், 4 செப்டம்பர், 2019

350 கிலோ மீட்டர் தூரம் 6 மாவட்டங்களை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்...!


Image
வாட்சப், பேஸ்புக் சேவைகள் என்பது இளைஞர்களின் பொழுது போக்கு என்பதே நாம் அறிந்த விவகாரம் ஆனால் அதனை தாண்டி 13 வயது சிறுவன் ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர் ராமநாதபுரம் இளைஞர்கள்.
350 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள், 4 மணி நேர ஆம்புலன்ஸ் பயணம் என துரித வேகத்தில் கடந்து 13 வயது சிறுவன் ஒருவனை காப்பாற்றியுள்ளனர் தமுமுக இளைஞர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் புற்றுநோய் தாக்கத்தால் முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு செல்வதாகவும் 8 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராமநாதபுரத்திலிருந்து, புதுச்சேரிக்கு 8 மணி நேரத்தில் சிறுவனை எப்படி அழைத்து செல்வது என தெரியாமல் தவித்த பெற்றோர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் உதவியை நாடியுள்ளனர். சிறுவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு செயல்பட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக திட்டமிட்டு செயல்பட தொடங்கினர். ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்ல புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டும்
இதற்காக அந்தந்த மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பப்பட்டது. அவர்களும் காவல்துறையினரின் உதவியுடன் பாதையை செம்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர். திட்டமிட்டபடி பயணம் தொடங்கியது. ஆம்புலன்ஸ் கடக்கும் பாதை குறித்த தகவல் வாட்ஸ் ஆப் மூலம் தமுமுக நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் நின்று கொண்டிருந்தவர்கள் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தி ஆம்புலன்ஸ் சென்றடைவதற்கான பாதையை ஏற்படுத்தினர். 
350 கிலோ மீட்டர் தூரம் சுமார் 4 மணி நேரத்தில் கடக்கப்பட்டது. சிறுவன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்... சினிமாக்களில் மட்டுமே காண கிடைக்கும் இந்த நிகழ்வை தங்களது சாதுர்யத்தால் நிறைவேற்றி காட்டி உள்ளனர் இந்த இளைஞர்கள்.. மனிதம் தான் மனிதனை வாழ வைக்கும் என உணர்த்தியுள்ள அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது.
credit ns7.tv