வெள்ளி, 6 செப்டம்பர், 2019

INX Media வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம்...!


Image
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், ப.சிதம்பரத்திற்கு தொடர்பிருப்பதாக கூறி கடந்த மாதம் 21-ம் தேதி அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதிலிருந்து அவர் தொடர்ச்சியாக சிபிஐ விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதே நேரம் இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை முயன்று வருகிறது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ப. சிதம்பரம், அமலக்கத்துறை தம்மை கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் அளிக்கக் கோரி இருந்தார். ஆனால் ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ சார்பில் மனு
இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிந்த நிலையில் 6வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுவரை நடைபெற்ற விசாரணைக்களுக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்காததால் அவரை நீதிமன்ற காவலில் அனுப்ப வேண்டும் என வாதிட்டார். மேலும், அவர் வெளியில் வந்தால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
கபில் சிபல் வாதம்
சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் இதுவரை எந்த ஆதாரமும் சமர்பிக்காத நிலையில் ப.சிதம்பரம் எப்படி ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பார் என கேள்வி எழுப்பினார்.  மேலும், ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அவரை திகார் சிறையில் அடைக்க வேண்டும் எனும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று வாதிட்ட கபில் சிபல், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையிடம் சிதம்பரம் சரணடைய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திஹார் சிறையில் ப.சிதம்பரம்
இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்திற்கு சிறையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவரது வயதை கருத்தில் கொண்டு மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அவரது வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை உரிய பாதுகாப்புடன் தனி அறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் ப.சிதம்பரம் திஹார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

credit ns7.tv