செவ்வாய், 3 செப்டம்பர், 2019

சிக்கலில் இருந்து மீள்வாரா சிதம்பரம்...?

credit ns7.tv
Image
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான முக்கிய விசாரணை சிபிஐ நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இன்று நடைபெறுகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரத்தை கடந்த 21ந்தேதி சிபிஐ கைது செய்தது. அவரை தங்கள் காவிலில் எடுத்து சிபிஐ காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. சிபிஐ காவல் நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப. சிதம்பரத்தின் காவலை மேலும் ஒருநாள் நீட்டிக்குமாறு சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார்,  ப. சிதம்பரத்தை இன்று வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார். இதனிடையே, இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடக் கோரி, ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே  தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது நடவடிக்கைக்கு எதிராக சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது சிதம்பரத்திற்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்காவிட்டால் அவரை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது என்றும், வீட்டுச் சிறையில் வைக்கலாம் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் எடுத்துரைத்தார்.
ப.சிதம்பரத்திற்கு 73 வயது ஆவதை சுட்டிக்காட்டி இவ்வாறு வாதம் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் சிதம்பரம் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை ரத்து செய்யப்படுமா அல்லது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுமா, அல்லது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவாரா என்பது. இன்று இரு நீதிமன்றங்களிலும் நடைபெறும் விசாரணையின் முடிவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.  

Related Posts: