திங்கள், 3 ஜூன், 2019

8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு....! June 03, 2019

Image
சேலம்-சென்னை இடையேயான எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு சேலம்-சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொண்டது.
இதற்காக விவசாய நிலங்கள், வனப்பகுதிகளை கையகப்படுத்தியதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து நில உரிமையாளர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ம் தேதி நிலம் கையகப்படுத்த தடை விதித்தது.
இதனை எதிர்த்து, எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீடிக்கும் எனவும், இந்த மனு மீது இருதரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.