மேகதாது அணை தொடர்பாக தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது, தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் முதற்கட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியும் என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. அக்கடிதத்தில், கர்நாடகத்துக்கு சொந்தமான பகுதியில் தான் அணை கட்ட முடிவெடுத்துள்ளதாகவும், இதற்காக தமிழக அரசிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் தமிழகத்திற்கு தந்த 177 புள்ளி இரண்டு ஐந்து டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாக குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, அதனால் தண்ணீரை சேமிக்க மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
credit ns7.tv